< Back
மாநில செய்திகள்
பழனி அருகே காட்டு யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த 2 பெண்கள் படுகாயம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி அருகே காட்டு யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த 2 பெண்கள் படுகாயம்

தினத்தந்தி
|
22 Aug 2022 9:04 PM IST

பழனி அருகே காட்டு யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பழனி அருகே ஆயக்குடி மலையடிவார பகுதியில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக ஆயக்குடி பொன்னிமலை கரடு அருகே பட்டா நிலங்களில் காட்டுயானைகள் சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது தோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்கின்றன. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று பழைய ஆயக்குடியை சேர்ந்த முனியம்மாள் (வயது 60), வள்ளிநாயகம் (45) உள்பட பெண்கள் 5 பேர் பொன்னிமலை கரடு பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிக்கு சென்றனர். அங்கு வேலை செய்தபோது, திடீரென்று காட்டுயானை ஒன்று அங்கு வந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அபயகுரல் எழுப்பியபடி அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது யானை அவர்களை துரத்தியது. இதில் முனியம்மாள், வள்ளிநாயகம் ஆகியோர் ஓடும் போது தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். மேலும் சிறிது தூரம் துரத்தி வந்த யானை, பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதற்கிடையே அபயகுரல் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் முனியம்மாள், வள்ளிநாயகத்தை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்