ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு 2 வாரம் சிறை
|ஐகோர்ட்டு உத்தரவை முறையாக செயல்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டதுடன், அவர்களது மன்னிப்பை ஏற்க முடியாது எனவும் கூறினார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் கல்வித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய பணியை நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. இதனால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு என்னுடைய பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி ஆனது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இது சம்பந்தமாக அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை செயலாளராக உள்ளார்) உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி ஏற்கனவே ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள்.
அப்போது நீதிபதி கூறுகையில், ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு எது சரி-எது தவறு? என்று ஆலோசனை செய்த பின்னர்தான் ஐகோர்ட்டு ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்கிறது. ஆனால் அந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை. கோர்ட்டு உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று அதே நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மன்னிப்பு கூறினர். ஆனால் அதை ஏற்க இயலாது.
இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரி செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்கள் 3 பேரும் வருகிற 9-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் சரண் அடைய வேண்டும். அவர்கள் மீது ஐகோர்ட்டு பதிவாளர் அவமதிப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.