சென்னை
பூந்தமல்லி அருகே ஊழியர்களை ஏற்றிச்சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதல் - 10 பேர் காயம்
|பூந்தமல்லி அருகே தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று காலை பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதேபோல் சென்னையில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு வேன், பெங்களூரு-பூந்தமல்லி சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே பெங்களூரு-பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற வேனின் டிரைவர், விதிமுறையை மீறி சாலையின் எதிர்திசையில் வேகமாக சென்றார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்கு நோக்கி வந்த வேன் மீது இந்த வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வேன்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் இரு வேன்களின் டிரைவர்கள் மற்றும் அதில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தில் சிக்கி சேதம் அடைந்த 2 வேன்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.