ராமநாதபுரம்
கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகள்
|ஏர்வாடி, தங்கச்சிமடத்தில் கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழக்கரை,
ஏர்வாடி, தங்கச்சிமடத்தில் கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கரை ஒதுங்கிய படகுகள்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அடஞ்சேரி கடற்கரையில் நாட்டுப்படகு ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கீழக்கரை கடலோர காவல்படை போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் அந்த படகில் சோதனை செய்தனர். அதில் உள்ள பதிவெண் அடிப்படையில் விசாரித்ததில் அது தூத்துக்குடியை சேர்ந்த படகு என்று தெரியவந்தது. அதாவது, தூத்துக்குடி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த நாட்டுப்படகு, கடந்த 2 நாட்களாக வீசிவரும் பலத்த காற்றால் நங்கூர கயிறு அறுந்து, காற்றின் போக்கில் அடித்து வரப்பட்டு இப்பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மற்றொரு படகு
இதே போல் தங்கச்சிமடம் கடற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு நாட்டுப்படகும் கரை ஒதுங்கி நின்றது. இது தொடர்பாக ராமேசுவரம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்வாடி, தங்கச்சிமடம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 நாட்டுப்படகுகள் கரை ஒதுங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.