விருதுநகர்
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
|சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை போக்குவரத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பாலமுருகன் ஆகியோர் புறவழிச்சாலை சாய்பாபா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை மடக்கி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதனைத்தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில் 42 மூடைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக வாகனத்தில் வந்த சண்முகராஜ் (வயது 23) உள்பட 2 பேரை மாவட்ட உணவு பொருள்கடத்தல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.