நீலகிரி
2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
|அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் 20 பேர் அடங்கிய குழு அமைத்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் 20 பேர் அடங்கிய குழு அமைத்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 புலிகள் சாவு
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இந்தநிலையில் ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் நீலகிரி வன அதிகாரி கவுதம், ஊட்டி தெற்கு வனச்சரகர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் வனத்துறையினர் இறந்து கிடந்த புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குழு அமைப்பு
இந்தநிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் ராஜேஷ், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் 2 புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.
புலிகள் இறந்து கிடந்த பகுதியில் பசு மாடும் இறந்து கிடந்தது. இதனால் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நீலகிரி உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) தேவராஜ் தலைமையில், உதவி வன பாதுகாவலர் சரவணன், கோரகுந்தா வனச்சரகர் ரவீந்திரன், ஊட்டி வனச்சரகர் சசிகுமார், பறக்கும் படை வனச்சரகர் ராஜகுரு உள்பட 20 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அதிகாரி கவுதம் கூறியதாவது:-
அவலாஞ்சி வனப்பகுதியில் 2 ஆண் புலிகள் இறந்து கிடந்தன. தண்ணீரில் இறந்து கிடந்த புலிக்கு 8 வயது. அதன் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை. புல்தரையில் இறந்து கிடந்த புலிக்கு 3 வயது இருக்கலாம். இந்த புலியின் முதுகெலும்பு நெடுவரிசையின் எலும்பு முறிவுடன், முதுகு மற்றும் கழுத்தில் வெளிப்புற காயங்கள் காணப்பட்டன. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இதன் வயிற்றில் முள்ளம்பன்றி முட்கள், முடி மற்றும் இறைச்சி இருந்தது. ஆனால் 2 புலிகளின் கோரை பற்கள், நகங்கள் உள்பட உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அப்படியே உள்ளன.
இந்த நிலையில் அதன் உள் உறுப்புகள் தடயவியல் மற்றும் பகுப்பாய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, ஐதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதேபோல் பசு மாட்டின் உடல் உள் உறுப்புகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. அறிக்கை வந்த பின்னர் புலிகள் இறப்பிற்கான காரணம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோப்ப நாய் உதவியுடன் சோதனை
அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்த பகுதியையொட்டி பட்டா நிலம், வீடுகள் உள்ளன. மேலும் பசு மாடும் இறந்து கிடந்தது. 20 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதன் மூலம் வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததா அல்லது வேறு ஏதாவது அசம்பாவித வேலைகள் நடைபெற்றதா? என்பதை கண்டறிய மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.