சென்னை
வடமாநில வாலிபரை தாக்கிய விவகாரம் 2 டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்
|சென்னை,
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நடைமேடையில் நடந்து வந்த வடமாநில வாலிபர் ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டார். அதற்கு அவர், "நான் ெரயிலில் வரவில்லை. நடைமேடையில்தான் நடந்து வந்தேன்" என்றார்.
ஆனால் டிக்கெட் இல்லாமல் வரக்கூடாது என்று கூறிய அக்ஷயா, அந்த வாலிபரை பெரம்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர் அறைக்கு அழைத்துச்சென்று அபராதம் கட்டும்படி கூறினார். அதற்கு மறுத்த வாலிபர், டிக்கெட் பரிசோதகர் அக்ஷயாவிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அக்ஷயா, வடமாநில வாலிபரின் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்தார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் ரெயில்வே உயர் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது. அவர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் வடமாநில வாலிபரை தாக்கியதாக டிக்கெட் பரிசோதகர்கள் அக்ஷயா மற்றும் ஹரிஷ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.