< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 2 ஆயிரத்து 673 வழக்குகளுக்கு தீர்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 2 ஆயிரத்து 673 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
14 Aug 2022 2:11 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 2 ஆயிரத்து 673 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் லோக் அதாலத் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான செல்வ சுந்தரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மகளிர் கோர்ட்டு மாவட்ட நீதிபதி சுபத்ரா தேவி, மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல கோர்ட்டு மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலாராஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாண்டில்யன், சார்பு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகாம்பிகை, சத்திய நாராயணன், செல்வரசி, பவித்ரா மற்றும் திரளான வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், கோர்ட்டு ஊழியர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த லோக் அதாலத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகள் மற்றும் வங்கி சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

அதேபோல பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதாவரம் தாலுகா கோர்ட்டுகளிலும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 455 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு அவற்றில் 2 ஆயிரத்து 673 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.26 கோடியே 16 லட்சத்து 93 ஆயிரத்து 628 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. முடிவில் பயனாளிகளுக்கு காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி வழங்கினார்.

மேலும் செய்திகள்