திண்டுக்கல்
சின்னாளப்பட்டியில் பெண்ணிடம் நகை பறித்த 2 திருடர்களுக்கு தர்மஅடி
|சின்னாளப்பட்டியில் பெண்ணிடம் நகை பறித்த 2 திருடர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
சின்னாளப்பட்டி ஆர்.கே.எஸ். தெருவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 47). இவர் இன்று மதியம் 12 மணி அளவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பாக்கியலட்சுமி அருகில் வந்தபோது, மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து வந்த ஒருவர், கண்இமைக்கும் நேரத்தில் பாக்கியலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தார். இதில் நிலைகுலைந்த பாக்கியலட்சுமி கீழே விழுந்தார்.
இதற்கிடையே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சின்னாளப்பட்டி பஸ் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது நகையை பறிகொடுத்த பாக்கியலட்சுமி அபயகுரல் எழுப்பினார். உடனே அக்கம்பக்கத்தினர் திருடர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
ஒரு கட்டத்தில் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் திருடர்கள் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த பொதுமக்கள், நகையை பறித்த திருடர்களை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் பிடிபட்ட 2 பேருக்கும் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அத்துடன் பாக்கியலட்சுமியிடம் பறித்த 4 பவுன் நகையை பொதுமக்கள் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட 2 திருடர்களையும் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த நூர்முகமது (வயது 40), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த அக்பர் அலி (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு எண்களில் வைத்திருந்த நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.