< Back
மாநில செய்திகள்
செல்பி எடுத்த 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலி
மாநில செய்திகள்

'செல்பி' எடுத்த 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலி

தினத்தந்தி
|
3 July 2023 4:42 AM IST

திருப்பூரில் தண்டவாளம் அருகில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலியாகினர்.

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

'செல்பி' எடுக்க முயன்றனர்

நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நண்பர்கள் கதறி அழுதனர்

இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்