< Back
மாநில செய்திகள்
ஊராட்சி தலைவர் கொலை வழக்கு:  ஓமலூர் போலீஸ் நிலையத்தில்   2 பேர் சரண்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஊராட்சி தலைவர் கொலை வழக்கு: ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் சரண்

தினத்தந்தி
|
3 Aug 2022 10:27 PM IST

தளி அருகே ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் சரண் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் சரண் அடைந்தனர்.

சரண்

தளி அருகே உள்ள பி.பி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (வயது 46). தாரவேந்திரம் ஊராட்சி தலைவராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்தனர். இதையொட்டி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் மாநில குழு உறுப்பினர் லகுமையா உள்பட பலர் திரண்டனர்.

தேன்கனிக்கோட்டையில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தளி கொத்தனூரை சேர்ந்த சின்னமல்லா (27) மற்றும் பி.பி.பாளையத்தை சேர்ந்த ரவி என்ற திம்மையா (40) ஆகியோர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர்.

கிரசர் நிறுவனம்

இதில் ரவி தாரவேந்திரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சாக்கம்மாவின் மகன் ஆவார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சரணடைந்த ரவி தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் கிரசர் நிறுவனத்திற்கு விற்றார். அதனால் அவர் உள்பட 4 பேருக்கு தனியார் கிரசர் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. அவர்களை வேலையில் இருந்து சமீபத்தில் நிறுவனம் நிறுத்தியது.

இதற்கு காரணம் ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தி தான் என ரவி நினைத்தார். பின்னர் நரசிம்மமூர்த்திக்கும் ரவியின் தாய் சாக்கம்மாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நரசிம்மமூர்த்தியை தீர்த்து கட்ட முடிவு செய்து கொலை செய்துள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்