கள்ளக்குறிச்சி
அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து ரூ.1¼ லட்சம் நகைகள் திருட்டு
|தியாகதுருகத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து ரூ.1¼ லட்சம் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் மேல்பூண்டிதக்கா பகுதியை சேர்ந்தவர் இதாயத் மனைவி ஷப்னம் (வயது 32). இவர் வீட்டை பூட்டி விட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அறிந்து வந்த ஷப்னம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 5 கிராம் நகை மற்றும் 350 கிராம் வெள்ளி நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதே போல் இவரது வீட்டின் அருகில் உள்ள அகமத்பாஷா என்பவரின் கூரை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 1¾ பவுன் நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது. இரு வீடுகளிம் திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் திருட்டு நடந்த இரு வீடுகளையும் பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து ஷப்னம், அகமத்பாஷா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்து பூட்டி இருந்த இரு வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் நகைகளை திருடிசென்ற சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.