சேலம்
நங்கவள்ளி அருகே சோகம்:ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
|நங்கவள்ளி அருகே குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மேச்சேரி
பள்ளி மாணவர்கள்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள கந்தனூர் முனியப்பன் கோவில் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். தறித்தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு பரணிதரன் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். பரணிதரன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
கலைவாணியின் தம்பி தங்கராஜ். இவர் திருமணமாகி காட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கீர்த்திஷ் (8). இவன் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
ஏரியில் மூழ்கி பலி
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராஜ் தனது குடும்பத்துடன் அக்காள் வீட்டுக்கு வந்தார். பரணிதரன், கீர்த்திஷ் அடிக்கடி வெளியே சென்று விளையாடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பரணிதரன், கீர்த்திஷ் விளையாட சென்றனர். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
குடும்பத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஏரியில் மாணவன் பரணிதரனின் செருப்பு தண்ணீரில் மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது பரணிதரன், கீர்த்திஷ் ஏரி தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
குடும்பத்தினர் கதறல்
2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. உடல்களை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் குளிக்க சென்றபோது, பரணிதரன், கீர்த்திஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதும், நீச்சல் தெரியாததால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவர்களின் உடல்களை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.