< Back
மாநில செய்திகள்
பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
சென்னை
மாநில செய்திகள்

பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தினத்தந்தி
|
13 Sept 2022 1:23 PM IST

செங்கல்பட்டில் உள்ள பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் வணிகர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சஞ்சய் (வயது 16). இவர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் டூட்டோரியல் மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவருடைய மகன் மற்றொரு சஞ்சய் (17). இவர், ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களான இவர்கள் இருவரும் பாலூர் அருகே உள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். ஆனால் அங்கு அவர்களை காப்பாற்ற யாருமே இல்லாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையில் குளிக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர், பாலாற்றங்கரையில் சென்று பார்த்தனர். அங்கு 2 மாணவர்களின் உடைகள் மட்டும் கரையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாலூர் போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேரத்துக்கு பிறகு மாணவர்கள் இருவரது உடல்களையும் மீட்டனர். 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்