< Back
மாநில செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்தனர்
சென்னை
மாநில செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - 'நீட்'டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்தனர்

தினத்தந்தி
|
27 Aug 2023 11:13 AM IST

‘நீட்’டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த 2 மாணவர்கள், நண்பர்களுடன் சுற்றிப்பார்க்க சென்றபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பலியானார்கள்.

குன்றத்தூர்,

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம், 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் குரு. இவருடைய மகன் ரிஷிகேஷ் (வயது 18). விருகம்பாக்கம் லோகையா காலனியை சேர்ந்தவர் அரிஷ் (18). நண்பர்களான இவர்கள் இருவரும் தங்களுடைய நண்பர்களான மாங்காட்டை சேர்ந்த ரிஸ்வான் (18), சாம் (18) ஆகியோருடன் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

ஏரிக்கரையின் மீது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏரியை சுற்றிப்பார்த்தனர். அப்போது ரிஷிகேசும், அரிசும் செம்பரம்பாக்கம் ஏரியின் 4-வது மதகின் கீழே இறங்கி நீரில் கால்களை நனைத்தனர். அப்போது நிலைதடுமாறி இருவரும் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கிய ரிஷிகேஷ் மற்றும் அரிஷ் இருவரையும் பிணமாக மீட்டனர்.

போலீசார் 2 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பலியான 2 பேரும், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், 'நீட்' தேர்விலும் தேர்ச்சி பெற்று இருப்பது தெரிந்தது. இவர்களில் ரிஷிகேஷ், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியில் சேர இருந்தார். அரிஷ் கலந்தாய்வில் கலந்து கொண்டுவிட்டு அட்மிஷனுக்காக காத்திருந்தார்.

இருவரும் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை தொடங்க இருந்த நிலையில் நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பலியான 2 மாணவர்களின் உடல்களுக்கும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தமிழக அரசின் சார்பில் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்