செங்கல்பட்டு
செங்கல்பட்டில் பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
|செங்கல்பட்டில் உள்ள பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் வணிகர் தெருவை சேர்ந்த கணேசன். இவரது மகன் சஞ்ஜய் (வயது 16). 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் டூட்டோரியல் மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரது மகன் மற்றொரு சஞ்ஜய் (17). இவர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுமுறைதினம் என்பதால் இவர்கள் இருவரும் மாலை பாலூர் அருகே உள்ள பாலாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குளித்து கொண்டிருந்தபோது, ஆழத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அங்கு அவர்களை காப்பாற்ற யாருமே இல்லாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
இதையடுத்து குளிக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் பாலாற்றங்கரையில் சென்று பார்த்த போது, 2 மாணவர்களின் உடைகள் மட்டும் கரையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் பதறினர். பின்னர், உடனடியாக பாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் செங்கல்பட்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடியதையடுத்து, 2 மாணவர்களையும் பிணமாக மீட்டனர். பின்னர், 2 மாணவர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.