திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
|ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஈன்றபாளையம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் நெல் அரவை எந்திர டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ருத்திஷ் (வயது 13). பாலவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பொன்னேரி அருகே உள்ள சிட்லபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் கோகுல் (13). பொன்னேரியை அடுத்துள்ள வெண்பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பாட்டி சாந்தம்மாள் ஈன்றபாளையத்தில் வசித்து வருகிறார்.
ஆற்றில் மூழ்கி சாவு
கோகுல் நேற்று ஈன்றபாளையத்தில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் ருத்தீசுடன் சேர்ந்து கிராம எல்லையில் உள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் ருத்திஷ் மற்றும் கோகுல் வீடு திரும்ப வில்லை. அவர்களது பெற்றோர் தேடி சென்றனர். அப்போது ஆரணி ஆற்றில் 2 பேரின் உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குமார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ருத்திஷ், கோகுல் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஆரணி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்த சம்பவம் ஈன்றபாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.