< Back
மாநில செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
சென்னை
மாநில செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

தினத்தந்தி
|
27 Jan 2023 3:09 PM IST

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச்சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் சச்சின் (வயது 13). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருடைய உறவினரான வேலுமணியின் மகன் நடிஷ் (13). இவர், அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குடியரசு தின விழாவையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் இருவரும் சைக்கிளை எடுத்து கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் கரையில் அமர்ந்து இருவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் நிலை தடுமாறி ஏரிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய 2 பேரையும் தேடினர்.

அப்போது அவரது உறவினர்களே நீரில் மூழ்கிய நடிஷை பிணமாக மீட்டனர். அதற்குள் இருட்டி விட்டதால் சச்சினை தேட முடியவில்லை. இதுபற்றி பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பூந்தமல்லி தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சச்சின் உடலை ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு சச்சின் உடலையும் மீட்டனர். பலியான 2 பேரின் உடல்களும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்