காஞ்சிபுரத்தில் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
|ரவுடிகள் தாக்கியதில் போலீசார் 2 பேர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் நேற்று பகலில் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட்டார். பிரபாகரனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வசூல்ராஜாவின் கூட்டாளிகள் ரகு மற்றும் அசேன் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் ரகு மற்றும் அசேன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரவுடிகள் ரகு, அசேனை கைது செய்ய போலீசார் சென்றனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் ரகு, அசேன் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்ட்டரையடுத்து காஞ்சிபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.