< Back
மாநில செய்திகள்
பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

குத்தாலம் அருகே பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

குத்தாலம்:

குத்தாலம் அருகே பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

பூட்டிய வீடுகளில் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையில் ஈடுபட்டும், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளிலும் கொள்ளை சம்பவம் நடந்து வந்துள்ளது.

தீவிர விசாரணை

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீசார் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குத்தாலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அஞ்சார்வார்த்தலை பகுதியில் கொள்ளையர்கள் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் போலீசாரைக் கண்டதும் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். அவர்களை தனிப்படை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராம்பாறை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 40) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வம் என்கிற முனியப்பிள்ளை என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பூட்டிய வீட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் ரூ.10,000; ரொக்கம் திருடிய சம்பவத்திலும், பெரம்பூர் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 7 பவுன் நகையை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவர்களை குத்தாலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள்மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்