சேலம்
ரேஷன் கடை விற்பனையாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
|ஆத்தூரில் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக 2 விற்பனையாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆத்தூர்:-
ஆத்தூரில் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக 2 விற்பனையாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விற்பனையில் முறைகேடு
ஆத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 27-ந் தேதி சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, மாவட்ட பறக்கும் படை அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் தீடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை ரசீதுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆத்தூர் அருகே உள்ள காந்திபுரம், அம்மன் நகர் மற்றும் மேட்டு தெரு ஆகிய ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டதை விட குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் கடைகளின் விற்பனையாளரான பிரவீன் குமார் ஈடுபட்டது தெரியவந்தது.
பணி இடைநீக்கம்
இதேபோல் ஆத்தூர் நகரம் மற்றும் லீ பஜார் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்களில், விற்பனையாளர் மகேந்திரன் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் குமார் மற்றும் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, கூட்டுறவு சங்க இணை பதிவாளருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று அவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.