புதுக்கோட்டை
மூதாட்டியிடம் நூதன முறையில் 2½ பவுன் சங்கிலி பறிப்பு
|புதுக்கோட்டையில், மூதாட்டியிடம் நூதன முறையில் 2½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
போலீஸ் என்று கூறி
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 3-ம் வீதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பெத்தியம்மாள் (வயது 60). இவர் சம்பவத்தன்று திருவள்ளுவர் நகர் 1-ம் வீதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டி அருகில் வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் அவர்கள் மூதாட்டியிடம் நாங்கள் போலீஸ் என்றும், இந்த பகுதியில் திருட்டு அதிகம் நடைபெறுகிறது. அதனை கண்காணிக்க தான் புதிதாக எங்களை நியமித்து உள்ளார்கள் என்று கூறியுள்ளனர்.
நூதன முறையில்...
மேலும் அடையாள அட்டை என்று ஒரு போலியான அட்டையை மூதாட்டியிடம் காட்டியுள்ளனர். பின்னர் நீங்கள் அணிந்து இருக்கும் தங்க நகையை கழட்டி பத்திரமாக வீட்டிற்கு கொண்டு ெசல்லுங்கள் என்று மர்மநபர்கள் கொண்டு வந்த மணிபர்சை கொடுத்துள்ளனர். அதில் மூதாட்டியிடம் இருந்து மர்மநபர்கள் 2½ பவுன் தங்க சங்கிலியை கழட்டி வாங்கி வைத்துள்ளனர். அப்போது தங்க சங்கிலி வைத்திருந்த பர்சுக்கு பதிலாக வேறு ஒரு பர்சை மர்மநபர்கள் மாற்றி கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறிது தூரம் சென்ற மூதாட்டி சந்தேகம் அடைந்து அவர் பர்சை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் தங்க சங்கிலி இல்லாததையும், தான் ஏமாற்றம் அடைந்ததையும் அறிந்து சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து மூதாட்டி கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.