சென்னை
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
|சென்னை திருமங்கலத்தில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கூடுதல் கமிஷனர் உத்தரவிட்டார்.
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்
சென்னை அண்ணா நகர், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சாலை விதிகளை மீறி செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் போக்குவரத்து போலீசாரும் ஆங்காங்கே நின்றபடி வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் விதிப்பதுடன், சிலர் மறைமுகமாக லஞ்சம் வாங்குவதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.
2 பேர் பணியிடை நீக்கம்
இந்தநிலையில் சென்னை திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை மடக்கி லஞ்சம் வாங்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது. இதுபற்றி விசாரணை நடத்தியதில் இருவரும் வாகன ஓட்டிகளில் லஞ்சம் வாங்கியது உறுதியானது.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் உத்தரவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.