நாகப்பட்டினம்
இந்திய அணியில் பங்கேற்று ஊர் திரும்பிய 2 வீரர்களுக்கு நாகையில் உற்சாக வரவேற்பு
|பிரிக்ஸ் பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெள்ளிபதக்கம் வென்று ஊர் திரும்பிய 2 வீரர்களுக்கு நாகை புதிய பஸ் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிக்ஸ் பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெள்ளிபதக்கம் வென்று ஊர் திரும்பிய 2 வீரர்களுக்கு நாகை புதிய பஸ் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச வாலிபால் போட்டி
தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான பீச் வாலிபால் போட்டி கடந்த 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 9 அணியினர் பங்கேற்றனர்.
இதில் இந்திய அணி சார்பில் நாகை நம்பியார் நகரை சேர்ந்த அபிதன் மற்றும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெடுவாக்கோட்டையை சேர்ந்த பூந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.
வெள்ளிப்பதக்கம்
இறுதி போட்டியில் இந்திய-ரஷ்யா அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 2-ம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
சர்வதேச போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த அபிதன், பூந்தமிழன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியினர் நேற்று சொந்த ஊர் திரும்பினர்.
உற்சாக வரவேற்பு
அந்த வகையில் நாகை புதிய பஸ் நிலையம் வந்த வீரர்கள் அபிதன், பூந்தமிழன் ஆகியோருக்கு நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வீரர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.
தொடர்ந்து திறந்த வேனில் அபிதன், பூந்தமிழன் ஆகியோர் பொதுமக்கள் புடைசூழ நம்பியார் நகருக்கு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது பீச் வாலிபால் பயிற்சியாளரும், நாகை மாவட்ட வாலிபால் சங்க செயலாளருமான கண்ணன், மாவட்ட தலைவர் ராஜகோபால், செயலாளர் கண்ணன், கவுரவத்தலைவர் ஆல்பர்ட் ஜான், துணைத்தலைவர்கள் மோகன்தாஸ், ராஜேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.