< Back
மாநில செய்திகள்
கொடைரோடு அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொடைரோடு அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

தினத்தந்தி
|
14 Aug 2023 1:15 AM IST

கொடைரோடு அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நண்பர்களுடன் சுற்றுலா

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். அவருடைய மகன் ஜெகநாதன் (வயது 27). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர், தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேர்ந்து திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி, கடந்த 11-ந்தேதி ஒரு காரில் ஜெகநாதனும், அவரது நண்பர்களும் சேலத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு வந்தனர்.

லாரி மீது கார் மோதல்

இந்தநிலையில் தங்களது சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு இவர்கள், நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து சேலத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை, டிரைவர் மகேந்திரன் ஓட்டினார்.

இவர்கள் வந்த கார், மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கொடைரோட்டை அடுத்த மாவூர் அணை பிரிவு அருகே வந்தது. அங்கு சாலையோரத்தில் பழைய இரும்பு பொருட்களுடன் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அந்த லாரியின் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றிருந்தார். இதற்கிடையே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் வந்த ஜெகநாதன் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் மகேந்திரன் (39) மற்றும் காரில் வந்த சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த கார்த்திக் (40), சங்கர் (29), கார்த்திக் (31), முருகேசன் (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மகேந்திரன் உள்பட 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ஜெகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்களில் முருகேசன் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்