காஞ்சிபுரம்
வீடு வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது
|காஞ்சீபுரம் அருகே வீடு வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அய்யங்கார்குளம் பகுதியில் வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தார். வீடு கட்டுவதற்கான வரைபட திட்ட அனுமதி பெறுவதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி (வயது 48) என்பவரிடம் விண்ணப்பித்திருந்தார்.
வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு கிருஷ்ணமூர்த்தியை நீண்ட நாட்களாக ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து அதை கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்பேரில் அய்யங்கார்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி கூறியதன் பேரில் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் புவனா (42) விடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்து இதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், ஊராட்சி செயலர் புவனா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியை கைது செய்து அவர்களிடம் ரூ.15 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.