< Back
மாநில செய்திகள்
சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 வீடுகளில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 வீடுகளில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
22 Aug 2022 5:35 PM IST

சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 வீடுகளில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் கே.வி.காலனியை சேர்ந்தவர் பத்ரி நாராயணன் (வயது 49). இவர், கடந்த 6-ந்தேதி குடும்பத்துடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுவிட்டு 8-ந்தேதி சென்னை திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து பத்ரி நாராயணன், அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேபோல் மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் உள்ள ஸ்ரீராம் (36) என்பவரது வீட்டில் கடந்த 14-ந் தேதி 15 பவுன் நகைகள் கொள்ளை போனது.

பத்ரிநாராயணன் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்கள் கைரேகைதான் ஸ்ரீராம் வீட்டிலும் பதிவாகி இருந்தது. எனவே இந்த 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பது தெரிய வந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாக நடத்திய விசாரணையில், 2 வீடுகளிலும் கைவரிசை காட்டியது பலே கொள்ளையர்களான திருவாரூரை சேர்ந்த வெங்கடேசன் (29), சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த அவருடைய சித்தப்பா சிவக்குமார் (47) ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த 50 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். இவர்கள் 2 பேரும் கியாஸ் அடுப்பு ரிப்பேர் தொழில் போர்வையில் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு, ஆள் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு இரவு நேரத்தில் கைவரிசை காட்டி வந்தனர். விசாரணைக்கு பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்