சென்னை
தண்டையார்பேட்டையில் தூங்கிக்கொண்டிருந்தவரை தூக்கிச்சென்று தாக்கிய 2 பேர் கைது
|தண்டையார்பேட்டையில் மீன்பாடி வண்டியில் தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கிச்சென்று தாக்கிய 2 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச்சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38). இவர் கடந்த 9-ந்தேதி இரவு பென்சில் பேக்டரி பஸ்நிலையத்தில் மீன்பாடி வண்டியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் சுரேஷ்குமாரை ரெயில்வே தண்டவாளம் பக்கமாக இழுத்துச்சென்றனர். அங்கு தண்டவாளத்தில் இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் பலமாக தாக்கியும், கல்லால் குத்தியும் காயப்படுத்தினர். இதைக்கண்ட பொதுமக்கள் சிலர் 2 பேரையும் துரத்திப்பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த சுரேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து வந்த சுரேஷ்குமார் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். . இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி கொருக்குப்பேட்டை மீனாம்பால் மேம்பாலத்துக்குக்கீழ் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார் (30), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாபுலால் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக, சுரேஷ்குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் கைது செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.