நாமக்கல்
ராசிபுரம் அருகே நகை திருடிய வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
|ராசிபுரம் அருகே நகை திருடிய வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). டிரைவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி சொந்த வேலையாக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கண்ணன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த மாதேஷ் மகன் ரமேஷ் (30), அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் சேட்டு என்கிற பெருமாள் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு வழங்கினார். அதில் சேட்டு என்கிற பெருமாள் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் 454-ன் படி தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.