திண்டுக்கல்
ரெயில்வே ஊழியரிடம் கத்தியை காட்டி செல்போன், பணத்தை பறித்த 2 பேர் கைது
|திண்டுக்கல் அருகே ரெயில்வே ஊழியரிடம் கத்தியை காட்டி செல்போன், பணத்தை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 60). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் மதுரை-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். தோமையார்புரம் பிரிவு அருகே அவர் வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை கட்டி மிரட்டி அலெக்சாண்டர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்து 250-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அலெக்சாண்டர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ் (33), தீபக் (25), மேற்கு மீனாட்சியநாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்ராஜ் (23) ஆகிய 3 பேர் சேர்ந்து அலெக்சாண்டரிடம் செல்போன், பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ராமையன்பட்டி அருகே பதுங்கி இருந்த ஜஸ்டின் செல்வராஜ், சரண்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான தீபக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.