கடலூர்
குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
|கடலூரில் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மேலும் 30 டிரைவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர் மாநகர பகுதியில் சில ஆட்டோ டிரைவர்கள், ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்வது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுவது, சீருடை அணியாமல் இருத்தல். உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களை ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று கடலூர் டவுன்ஹாலில் நின்றபடி வாகன சோதனை நடத்தினர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். நவீன கருவி மூலம் சோதனை செய்ததில் 2 டிரைவர்கள் குடிபோதையில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, 2 ஷேர் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இது தவிர ஓட்டுனர் உரிமம் இல்லாமை, அதிவேகமாக ஓட்டுதல். சீருடைய அணியாமை, அதிக பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மேலும் 30 ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கும் தலா ரூ.500, ரூ.1000, ரூ.1500 வீதம் அபராதம் விதித்தனர். இதேபோல் தனியார் பஸ் டிரைவர்களையும் சோதனை நடத்த உள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.