< Back
மாநில செய்திகள்
குவாரியில் பாறை, மண் சரிந்ததில் 2 பேர் பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குவாரியில் பாறை, மண் சரிந்ததில் 2 பேர் பலி

தினத்தந்தி
|
30 July 2022 2:28 AM IST

குவாரியில் பாறை, மண் சரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

குன்னம்:

கல் குவாரி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கவுள்பாளையம் காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). இவர் அரசு உரிமம் பெற்று கவுள்பாளையத்தில் கல் குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரி முருகேசனின் இளைய சகோதரர் சுப்பிரமணி(40) மேற்பார்வையில் இயங்கி வந்தது.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 80 அடி ஆழமுள்ள கல்குவாரியில் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்ததாக தெரிகிறது. கருங்கல்லை ஏற்றிச்செல்வதற்காக அங்கு லாரி டிரைவர் பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(32) நின்று கொண்டிருந்தார்.

2 பேர் சாவு

சுப்பிரமணி மலையின் மேற்புறத்தில் நின்று கொண்டு, தொழிலாளிகளுக்கு பணியை பிரித்து கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர் நின்று கொண்டிருந்த மலையின் மேற்புறம் திடீரென சரிந்தது. இதில் பாறைக்கற்கள் மற்றும் மண் சரிவால் பாறைகளுக்கு இடையே சிக்கிய சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்தபோது மேற்பகுதியில் இருந்து குவாரிக்குள் பாறைக்கற்கள் சிதறி விழுந்தன.

இதில் குவாரியின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த செந்தில்குமாரின் கழுத்துப்பகுதியில் ஒரு கல் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

குவாரி மூடல்

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும் குவாரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அந்த கல் குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குவாரி மூடப்பட்டது.

மேலும் குவாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சுரங்கத்துறையிடம் விளக்கம் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து உயிரிழந்த சுப்பிரமணி, ெசந்தில்குமார் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சாலை மறியல்

இந்நிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய தொழிலாளர் கட்சியினருடன் இணைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே துறையூர் சாலையில் நேற்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அப்போது அவர்கள், செந்தில்குமார் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து மூட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

உடலை வாங்க மறுப்பு

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் பெரம்பலூர் போலீசார், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுப்பிரமணியின் உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர். ஆனால் செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைக்கவோ, அவரது உடலை பெறவோ அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து கல்பாடி கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை கொடுத்த புகாரின்பேரில் கல்குவாரியின் உரிமையாளர் முருகேசன், மேலாளர் லோகநாதன் ஆகியோர் மீது போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்று மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்த சுப்பிரமணிக்கு சுதா என்ற மனைவியும், சுமித்ரா என்ற பெண் குழந்தையும், பவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதேபோல் இறந்த செந்தில்குமாருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஸ்ரீமா, சஹானி என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கல்குவாரியில் கல், மண் சரிவால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்