விழுப்புரம்
நகை, பணத்தை கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்
|ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்.
விழுப்புரம் சாலாமேடு வ.உ.சி. நகரில் வசித்து வருபவர் தங்கமணி (வயது 60). இவர் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 17-ந் தேதியன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்த அவர்கள் இருவரும் மீண்டும் கடந்த 1-ந் தேதி காலை விழுப்புரம் வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், ¼ கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரின் மீது வேறு ஏதேனும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதா, எந்தெந்த மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.