திருப்பத்தூர்
வாழை செடி வைக்க முயன்ற 2 பேர் கைது
|ஜவ்வாதுமலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாழை செடி வைக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜவ்வாதுமலை புதூர் நாடு பெருமாள் கோயிலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 39), விவசாயி.
இவரும் ஜே.சி.பி. டிரைவர் ஒருவரும் வனத்துறைக்கு சொந்தமான அரசு இடத்தில் வாழை செடி வைக்க பள்ளம் தோண்டி உள்ளனர்.
இதன் காரணமாக இருவரையும் வனத்துறையினர் கைது செய்து திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து உறவினர்களுக்கு தெரிவிக்காமல் 2 பேரை வனத்துறையினர் அழைத்து சென்றதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் புதூர் நாட்டிலிருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் அவர்கள் சிறை பிடித்தனர்.
இதன் காரணமாக திருப்பத்தூர் புதூர் நாடு சாலை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.