திருவாரூர்
ஓட்டலை அடித்து உடைத்த 2 பேர் கைது
|சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓட்டல் அடித்து உடைப்பு
நீடாமங்கலம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது 45). இவர் நீடாமங்கலம் மீன் மார்க்கெட் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஆதனூர் சமத்துவ புரத்தைச்சேர்ந்த சரத்குமார் (28), கும்பகோணம் ரோடு கொட்டையூரைச் சேர்ந்த திவாகர், கொத்தமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் (23), பாப்பையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், ஆகிய 4 பேரும் உணவு சாப்பிட வந்துள்ளனர்.
உணவு சாப்பிட்ட பின் 4 பேரிடமும், தென்னரசு பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் சாப்பிட்டதற்கு எங்களிடமே பணம் கேட்கிறாயா? என கேட்டு ஓட்டலை அடித்து உடைத்து சூறையாடினர்.
பஸ் கண்டக்டரிடம் தகராறு
மேலும் அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் ஊழியரையும் தாக்க முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து 4 பேரும் அங்கிருந்து சென்று கடம்பூர் பாலம் அருகே நீடாமங்கலத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி கண்டக்டர் கும்பகோணம் செட்டி மண்டபத்தை சேர்ந்த வீரமணி(54) என்பவரிடம் ரூ.100 கொடுத்து ஆதனூருக்கு செல்ல டிக்கெட் கேட்டுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் டிக்கெட் மற்றும் பாக்கித்தொகையையும் கொடுத்தார். அப்போது எங்களிடமே டிக்கெட்டிற்கு பணம் கேட்கிறாயா? என கூறி சரத்குமாரும், லோகநாதனும் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர்.
2 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரத்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேரையும் பிடித்தனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் தென்னரசு, பஸ் கண்டக்டர் வீரமணி ஆகியோர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன் பேரில் சரத்குமார், லோகநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திவாகர், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.