நாமக்கல்
மோட்டார் சைக்கிளில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்
|நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 கிலோ கஞ்சா பறிமுதல்
நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் ராமாபுரம்புதூர் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ரூபன் என்கிற தேவரூபன் (வயது35) என்பதும், மற்றொருவர் நாமக்கல் குட்டைமேலத்தெருவை சேர்ந்த சரவணன் (26) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வருவதும் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்த சாக்கு பையை போலீசார் பறிமுதல் செய்து, சோதனை செய்தனர். அப்போது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து ரூபன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.