< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி

தினத்தந்தி
|
10 March 2023 4:31 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

கிராம உதவியாளர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள நாட்டாண்மைக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 36). கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும் காட்டுஅப்பாவரத்தை சேர்ந்த ஆஷா என்கிற பூர்ணிமா (28) என்பவருக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லை.

இவரது வீட்டிற்கு பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள மல்லியங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் அவரது தங்கை புவனேஸ்வரி (33) தனது மகள் சபர்மதியுடன் (6) வந்திருந்தார். சபர்மதி பெருவாயலில் உள்ள தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

இந்த நிலையில், நேற்று காலை தங்கை குழந்தை சபர்மதியை பெருவாயலில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு அப்படியே தங்கை புவனேஸ்வரி மல்லியங்குப்பம் செல்வதற்காக புதுவாயல் கூட்டுச்சாலையில் விடுவதற்காக ராஜசேகரன் தனது மோட்டார் சைக்கிள் அவர்கள் 2 பேரையும் அழைத்து சென்றார்.

அப்போது பெருவாயல் அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது அதே திசையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற கிராம உதவியாளர் ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது தங்கை புவனேஸ்வரிக்கு கால் முறிந்து படுகாயம் அடைந்தார். சிறுமி சபர்மதியும் படுகாயம் அடைந்ததார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியுடன் தப்பி சென்றார். படுகாயம் அடைந்த புவனேஸ்வரி மற்றும் சபர்மதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குழந்தை சபர்மதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். கிராம உதவியாளராக வேலையில் சேர்ந்து 2 மாதங்களே ஆன நிலையில் ராஜசேகரன் மற்றும் தங்கை மகள் சபர்மதி ஆகியோர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்