< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
30 Sept 2023 3:00 AM IST

கோவையில் பட்டா மாறுதலுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி


கோவையில் பட்டா மாறுதலுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-


கட்டுமான தொழில்


கோவை வடவள்ளி மருதமலை அருகே ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் மனோகரன். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள தனது வீட்டை, அவரது மகன் பாரதிக்கு செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்து கொடுத்து உள்ளார்.

இதையடுத்து அவர், அந்த வீட்டின் பட்டா மாறுதலுக்காக இ-சேவை மையத்தில் கடந்த 19-ந் தேதி விண்ணப்பித்தார்.

இதையடுத்து கடந்த 20-ந் தேதி வடவள்ளியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் நவீன் (30) என்பவரை சந்தித்து பட்டா மாறுதல் குறித்து கேட்டு உள்ளார்.

அதற்கு நவீன் பட்டா மாறுதல் தொடர்பான சொத்தின் ஆவணங்களை எடுத்து வரும்படியும், மேலும் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.


பட்டா மாறுதல்


இதையடுத்து மனோகரன் கடந்த 26-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் நவீனை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா பெயர் மாறுதல் குறித்து கேட்டார்.

அதற்கு அவர், தனது உதவியாளர் மாணிக்கராஜ் (50) என்பவரை சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.

மனோகரன், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மாணிக்கராஜிற்கு போன் செய்து பட்டா மாறுதல் குறித்த விவரம் கேட்டுள்ளார்.

அப்போது அவர், கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் வாங்குவார், நீங்கள் தெரிந்தவர் என்பதால் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியதாக தெரிகிறது.


லஞ்சப்பணம்


இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன், நவீனை சந்தித்து லஞ்ச பணத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டு உள்ளார். உடனே நவீன் பட்டா மாறுதலுக்கு பரிந்துரை மட்டும் செய்ய ரூ.2 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியதாக தெரிகிறது.


இதையடுத்து கடந்த 28-ந் தேதி மனோகரன், கிராம நிர்வாக உதவியாளர் மாணிக்கராஜிடம் பட்டா மாறுதல் குறித்து கேட்டார். அப்போது அவர் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதலுக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியதாக தெரிகிறது.


புகார் அளித்தார்


எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திவ்யா விடம் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.


அந்த ரூபாய் நோட்டுகளுடன் மனோகரன் நேற்று மதியம் வடவள்ளி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் நவீனிடம் ரூ.2 ஆயிரம் கொண்டு வந்து உள்ளதாக கூறினார். உடனே அவர், அந்த பணத்தை உதவியாளர் மாணிக்கராஜிடம் கொடுக்குமாறு கூறினார்.


2 பேர் கைது


அதன்படி மனோகரன் தான் வைத்திருந்த ரசாயனம் தடவிய பணத்தை மாணிக்கராஜிடம் கொடுத்தார். உடனே கிராம நிர்வாக அலுவலர் நவீன், பட்டா பெயர் மாற்றத்திற்கு வருவாய் துறை இணையதளத்துக்கு சென்று உரிய போர்டல் மூலம் பரிந்துரை செய்ததாக தெரிகிறது.


இதனை மறைந்திருந்து கண்காணித்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திவ்யா, இன்ஸ்பெக்டர் ஷீலா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ரசாயனம், தடவிய நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்