புதுக்கோட்டை
ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் பலி
|விராலிமலை அருகே லாரி மீது கார் மோதியதில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னைக்கு காரில் பயணம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா கங்காகுளத்தை சேர்ந்த செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (வயது 52). இவரும் கிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னன் (52), நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சிமன்ற தலைவர் சமுத்திரம் (55), ஆகிய 3 பேரும் சென்னையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
இதற்காக கருப்பசாமி, அபிமன்னன் உள்ளிட்ட 4 பேரும் சிவகாசியில் இருந்து காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா ஈஸ்வர தேவர் தோட்டத்தை சேர்ந்த பாஸ்கர் (53) ஓட்டினார்.
ஊராட்சி தலைவர் பலி
அவர்களது கார் நள்ளிரவு 1.50 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில்...
மேலும் காரில் இருந்த அபிமன்னன், சங்கர், சமுத்திரம், டிரைவர் பாஸ்கர் ஆகிய 4 பேரும் பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்துகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அபிமன்னன் இறந்தார். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேருக்கும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.