திருச்சி
ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கஞ்சா-புகையிலை பொருட்கள்
திருச்சி வரகனேரி பிச்சைநகர் பகுதியில் கஞ்சா விற்ற வரகனேரியை சேர்ந்த யூனுஸ் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.300, ஒரு செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
கடந்த 1-ந் தேதி கரூர் பைபாஸ்ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரி ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சீனிவாசன் (40) என்பவர் ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள 56 கிலோ தடை செய்யப்பட்ட புைகயிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், சீனிவாசனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்து 890 மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள், ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 320, 9 செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
விசாரணையில் ரவுடியான யூனுஸ் மீது காந்திமார்க்கெட், திருவெறும்பூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், யூனுஸ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தொடர்ச்சியாக கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்கும் எண்ணத்தில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.