திருச்சி
ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பல்வேறு வழக்குகள்
திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி மாரியம்மன் கோவில் பின்பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 45) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 2½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் மீது கஞ்சா விற்றதாக 8 வழக்குகள் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதுபோல் அரியமங்கலம் நேருஜிநகர் பகுதியில் மளிகை கடை நடத்திவரும் பெண்ணை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த ரவுடியான குலாம் தஸ்தஹீர் (33) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது, 4 வழிப்பறி வழக்குகள் உள்பட 13 வழக்குகள் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
குண்டர் சட்டத்தில்...
இவர்கள் இருவரும், தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால், இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் ஊறுவிளைவிப்பார்கள் என்று போலீசார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். அந்த ஆணை திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவருக்கும் நேற்று வழங்கப்பட்டது.