< Back
மாநில செய்திகள்
சிறப்பு முகாமில் தங்கியுள்ள ராபர்ட் பயாஸ் உள்பட 2 பேர் உண்ணாவிரதம்
திருச்சி
மாநில செய்திகள்

சிறப்பு முகாமில் தங்கியுள்ள ராபர்ட் பயாஸ் உள்பட 2 பேர் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
19 Nov 2022 8:15 PM GMT

சிறப்பு முகாமில் தங்கியுள்ள ராபர்ட் பயாஸ் உள்பட 2 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பு முகாமுக்கு மாற்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்(வயது 59) ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை திருச்சியில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்க உள்துறை முடிவு செய்தது.

இதற்காக, கடந்த 12-ந் தேதி மாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து விடுதலையான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அன்று நள்ளிரவே அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

வேறு அறை ஒதுக்க கோரிக்கை

அங்கு முருகன், சாந்தன் ஆகியோருக்கு ஒரு அறையும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டது. அப்போது ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் தங்களுக்கு வேறு அறை ஒதுக்கித்தரும்படி கோரிக்கை விடுத்தனர். அத்துடன் வேறு அறை ஒதுக்கி கொடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

அவர்களின் பாதுகாப்பு கருதி வேறு அறை ஒதுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அதே அறையில் தங்கி இருந்தனர்.

3 நாட்களாக உண்ணாவிரதம்

கடந்த திங்கட்கிழமை சிறப்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வுக்கு சென்றபோதும் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு வேறு அறைகளை மாற்றிக்கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு 2 நாட்களில் அதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிச்சென்றதாக தெரிகிறது.

ஆனால் 2 நாட்கள் கடந்தும் அறையை மாற்றி கொடுக்காததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேரும் உண்ணாவிரதம் இருக்க தொடங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களாக 2 பேரும் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயக்குமாருக்கு உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டாக்டர்களை வரவழைத்து அவரை பரிசோதனை செய்துள்ளனர்.

மூச்சுத்திணறல்

இந்தநிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ஜெயக்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை பிரிவில் உள்ள அவசர சிகிச்சை பகுதியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு

ஜெயக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த வார்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் ஆஸ்பத்திரி வளாகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் சென்று, ஜெயக்குமாரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதனால் நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

இதற்கிடையே சிறப்பு முகாமில் ராபர்ட் பயாஸ் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஏற்கனவே இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து 90 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

மேலும் செய்திகள்