திருவண்ணாமலை
அடுத்தடுத்து நடந்த விபத்தில் மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
|கீழ்பென்னாத்தூர் அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் மேஸ்திரி உள்பட 2 பேர் இறந்தனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் மேஸ்திரி உள்பட 2 பேர் இறந்தனர்.
கட்டிட மேஸ்திரி
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பொலக்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் ஜெயக்குமார் (வயது 30). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெயக்குமார் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மலப்பாம்பாடி கிராமம் வழியாக தனியார் மனைப்பிரிவு அருகில் வந்த போது எதிரில் வேகமாக வந்த லாரி ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்தம் காயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு விபத்து
கீழ்பென்னாத்தூரையடுத்த கரிக்கலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் குமார் (45). மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் பழனி (54). இருவரும் விவசாயிகள்.
நேற்று அதிகாலையில் இவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் மணிலா மூட்டைகளை மினி வேனில் ஏற்றிக்கொண்டு கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
மினி வேனை அதே ஊரை சேர்ந்த பிரசாந்த் ஓட்டிச் சென்றார்.
கருங்காலிகுப்பம் அருகில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள பனைமரத்தில் மோதியது. இதில் பழனி வேனுக்குள் சிக்கிக்கொண்டார்.
சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குமார், பிரசாந்த் ஆகியோர் ஆம்புலன்சில் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார்.
போலீசார் விசாரணை
இதனிடையே வேனுக்குள் சிக்கிய பழனியை தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 விபத்துகள் குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.