வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஓட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
|வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஓட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் ஒரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீரமைப்பு பணி
வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலின் பின்பகுதியில் உள்ள சமையல் கூடத்தின் சுவர் ஈரம் பாய்ந்து வலுவிழந்த நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்ததால் ஓட்டலில் சமையல் கூடத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
நேற்று காலைக்கு கடைக்கு வந்த ஊழியர்கள் இதைப்பார்த்து உரிமையாளரிடம் தெரிவித்தனர். பின்னர் கடையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அகற்றும் பணியும், சீரமைப்பு பணியும் நேற்று காலை நடந்தது.
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50) என்ற கட்டிட மேஸ்திரியும், கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா (45) உள்பட 2 பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
சுவர் இடிந்து விழுந்தது
அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் காலை 10 மணி அளவில் எதிர்பாராத விதமாக மற்றொரு பகுதி சுவரும் இடிந்து விழுந்தது. அதில் ராமமூர்த்தி, வெண்ணிலா உள்பட 3 பேரும் சிக்கி காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது 3 பேரில் ஒரு பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பின் மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கட்டிட மேஸ்திரி ராமமூர்த்தியும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ராமமூர்த்தி மற்றும் அவருடன் வந்த ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வெண்ணிலா என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமமூர்த்தியுடன் இறந்த பெண்ணின் பெயர் குறித்த விவரம் தெரியவில்லை. அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதவி-கலெக்டர் கவிதா தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த ஓட்டலுக்கு 'சீல்' வைத்தனர்.