< Back
மாநில செய்திகள்
வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
29 Jan 2023 7:27 PM GMT

தனித்தனி விபத்துகளில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திண்டிவனம்,

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் சோன்பர்சா பகுதியை சேர்ந்த பங்கஜ்குமார் மகன்கள் நிரோஜ் குமார்(வயது 27), பிரியன்சு குமார்(22). இவர்கள் உள்பட 20 பேர், திண்டிவனம் பாஞ்சாலம் அருகே தனியார் நிறுவனத்தில் கட்டுமான வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நிரோஜ் குமார்(27) மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பலி

செஞ்சி அருகே உள்ள வல்லம் மருதேரியை சேர்ந்தவர் நாராயணன் மனைவி ராமாயி(வயது 77). இவர் சம்பவத்தன்று நாட்டார்மங்கலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வல்லம் மருதேரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராமாயி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கிகிச்சை பலன் இன்றி ராமாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து

திண்டிவனத்தில் இருந்து நொளம்பூருக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை சென்னை துரைப்பாக்கம் 4-வது தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் டேவிட்(வயது 54) என்பவர் ஓட்டினார். ஆட்டோவில் 8 பேர் பயணம் செய்தனர். திண்டிவனம் அடுத்த நொளம்பூர் சாலையில் உள்ள கீழ்கூடலூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் சஞ்சய்(12), சுரேஷ் மனைவி கவிதா(35), சரவணன்(43), இவரது மனைவி ஹேமலதா(37), சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த டேவிட் மனைவி விமலா(49), மகள் கிறிஸ்டில்லா, திண்டிவனத்தை அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மனைவி வசந்தா(57) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்