< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த திரைப்பட இயக்குனர் உள்பட 2 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த திரைப்பட இயக்குனர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
15 Dec 2022 12:15 AM IST

கடலூரில் அலுவலக திறப்பு விழாவுக்காக அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த திரைப்பட இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். விழாவில் பங்கேற்க வந்த யூ டியூபருடன் செல்பி எடுக்க வந்தவர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

திறப்பு விழா

கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). திரைப்பட இயக்குனர். இவரது திரைப்பட அலுவலக திறப்பு விழா புதுப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு யூடியூபர் டி.டி.எப்.வாசன் வருகை தந்து, அலுவலகத்தை திறந்து வைத்தார். இதற்கிடையே டி.டி.எப்.வாசன் கடலூர் வந்தது பற்றி அறிந்த அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் புதுப்பாளையத்தில் திரண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் வந்த வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்தியதால், புதுப்பாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே மதியம் 3 மணி அளவில் டி.டி.எப். வாசன் காரில் புறப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவரது காரை முற்றுகையிட்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல வழியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தன.

போலீசாருடன் வாக்குவாதம்

இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, வாசன் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார், டி.டி.எப். வாசனின் ரசிகர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சிலர் செய்வதறியாது மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்து சென்றதையும் காண முடிந்தது. பின்னர் கூட்டம் கலைந்ததும், போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திரைப்பட இயக்குனர் கைது

இதனிடையே யூடியூபரை வரவேற்று கடலூர் பாரதி சாலையில் எவ்வித அனுமதியும் இன்றி விளம்பர பதாகைகள் வைத்ததாக திரைப்பட இயக்குனர் செந்தில், இவரது மேலாளரான எஸ்.என்.சாவடியை சேர்ந்த விக்னேஷ் (34) ஆகியோரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்ததாக செந்தில், விக்னேஷ் ஆகிய 2 பேர் மீதும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக டி.டி.எப்.வாசன், செந்தில் உள்ளிட்ட 300 போ் மீது புதுநகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனா்.

யூடியூபா் டி.டி.எப். வாசனை பார்ப்பதற்காக அவரது ரசிகா்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டும் புதுப்பாளையம் பகுதிக்கு வந்தனா். அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலீசார், அவா்களை மறித்து அபராதம் விதித்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், 3 பேரை ஏற்றி வந்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் என 20 மோட்டார் சைக்கிள்களுக்கு மொத்தம் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்