< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உள்பட 2 பேர் பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
11 Sept 2023 12:22 AM IST

பெரம்பலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.

மின்சாரம் பாய்ந்து பலி

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 61), விவசாயி. இவர் நேற்று காலை அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயலில் புல் அறுக்க நடந்து சென்றார். நேற்று முன்தினம் இரவு செங்குணம் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. அதில் ராமகிருஷ்ணன் வயல் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மின்சார ஒயர் அறுந்து தொங்கி உள்ளது.

இதை கவனிக்காத கண்ணன் அதனை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பலியான கண்ணனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரீசியன் பலி

இதேபோல் ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (43), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது உறவினரான பாலமுருகன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அழகுராஜ் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு காரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகுராஜ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்