கடலூர்
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
|சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
சிதம்பரம்,
நண்பர்களுடன் குளித்தனர்
சிதம்பரம் அண்ணாமலைநகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் ஹித்தேஸ்வரன் (வயது 21). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் பிரசாத் (33) ஆவார். இவர்கள் தங்களது நண்பர்கள் 7 பேருடன் நேற்று மாலை புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டைக்கு சென்று கடலில் குளித்தனர்.
2 பேர் பலி
அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் ஹித்தேஸ்வரன், பிரசாத் ஆகிய 2 பேரும் சிக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை அலை கடலுக்குள் இழுத்து சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டபடி அவர்களை மீட்க முயன்றனர். இருப்பினும் 2 பேரையும் மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஹித்தேஸ்வரன், பிரசாத் ஆகியோரது உடல் கரை ஒதுங்கியது. உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே இதுபற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் விரைந்து வந்து கடலில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.