திண்டுக்கல்
2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
|சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்காரம்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூரை சேர்ந்தவர்கள் மணி (வயது 60), கனகராஜ் (60). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்துள்ளனர். பின்னர் அதை கூறி மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜிக்கு போக்சோ சட்ட பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
20 ஆண்டுகள் சிறை
அதேபோல் மணிக்கு போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டம் பிரிவு 12-ன் (ஆபாச படத்தை காண்பித்து தொல்லை) 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (1)-ன் கீழ் (மிரட்டல்) ஓராண்டு சிறை தண்டனையும், 366 (ஏ) பிரிவின் கீழ் (பாலியல் தொல்லை) 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.500 அபராதமும் விதித்ததோடு, சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.