< Back
மாநில செய்திகள்
கஞ்சாவை எலிகள் தின்ற விவகாரம் - இருவர் விடுதலை
மாநில செய்திகள்

கஞ்சாவை எலிகள் தின்ற விவகாரம் - இருவர் விடுதலை

தினத்தந்தி
|
4 July 2023 10:33 AM GMT

11 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்ட நிலையில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மறுக்கும் தமிழக போலீசார், கஞ்சா வேட்டை எனக் கூறி கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் போலீசார் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணையின்போது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அதில் 11 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, போலீசாரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

கஞ்சாவை எலி கடித்துவிட்டது என்று போலீசார் சொல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்போது போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து மொத்தம் 581 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்திருந்தனர். இருப்பினும், வழக்கு விசாரணையில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியவில்லை. நீதிபதி கேட்டதற்கு எலிகள் தின்று விட்டதாகத் தெரிவித்தனர். உபியில் நடந்த சம்பவம் இப்போது சென்னையிலும் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்